ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சுரர் யார் ?

சுரர் யார் ?

மறைமலை அடிகளாரின் படப்பிடிப்பு

"சோமப் பூண்டின் சாற்றினாற் சமைத்தக்கள்ளை மிகுதியாய்ப் பருகி வெறித்திருந்தன ரென்பதும் சூதாட்டத்தில் நிரம்ப இறங்கி பலவகையான அல்லலுக்கு இரையாகின ரென்பதும் இருக்கு வேதத்திற் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன." (the leading vices of the aryan race have always been drinking and gambling. The rig veda bears ample witness to both "vedic india" by Zenaide A.Ragozin-page875)


கடும் புயற்காற்றைப் போல , யான் பருகியிருக்குங்கள் என்னை உயரத் தூக்கிச் செல்கின்றது ; யான் சோமச் சாற்றை பருகியிருக்கின்றேன் அல்லேனோ ?

விரைந்து பறக்குங் குதிரைகள் ஒரு தேரை இழுத்துச் செல்வது போல், யான் பருகியிருக்குஞ் சாறு என்னை மேலே சுமந்து செல்கின்றது ; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அலேனோ ! ஆ! இவ்வகன்ற மண்ணுலகைப் பெயர்த்தெடுத்து இங்கேயாவது அங்கேயாவது வைப்பேன் . யான் சோமச்சாற்றைப் பருகியிருக்கின்றெனல்லேனோ. இவையெல்லாம் "சோம பானம் " எனும் அக்கால உற்சாக பானம் குடித்த ஆரியனின் அனுபவ உரைகள் (படிக்க - ரிக் மண்டலம் 10 ரிக்குகள் 116)

மூஜவான் மலையில் வளரும் சோமப்பூண்டின் மிகுந்த கள்ளைவிட, என்றும் உறங்காத , இச்சூதுகாய் என் மனத்திற்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது.

முடிவாக மிஞ்சிய ஒரு சிறு முனையையுடைய இச்சூதுகாயின் பொருட்டு என் மனைவியையும் யான் நீக்கிவிட்டேன்.

தன் செல்வமெல்லாம் சூதுகாய் என்னும் விரைந்த குதிரையாற் கவரப்பட்டவன்றன் மனைவியை ஆடவர் பிறர் தழுவுகின்றார்.''

சூதாடிச் சொக்கனான ஆரியன் தன் மனைவியை மாற்றார் தழுவுவதைப் பற்றிப் புலம்பியவை இவை(பார்க்க - ரிக்வேதம் 10 ஆம் மண்டிலம் 34)

இவர்கள் அசுரர்கள்

இந்தச் சுரர்கள்தாம் நம்மை அசுரர்கள் என்றனர்.'அ' சேர்த்து எதிர்ப்பெயராக்கினர்.அதாவது, சுரா பானம் குடிக்காதவர்கள் நாம்! எனவே அசுரர்கள்!

கள்ளுண்ணாமை பற்றிப் பத்துப் பாடல்கள் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

அது பற்றிப் பத்துப் பாடல்கள் திருக்குறளில் உள்ளன.

நாம் அசுரர்கள்தான்! பொருத்தமான பெயர்தான்!

(ரிக் வேத வரிகளின் தமிழாக்கம் தமிழ்க்கடல் மறை மலை அடிகளாரின் "மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும்" எனும் நூலில் உள்ளவாறு)

சுரர்களின் ஒழுக்கம்

மறை மலை அடிகள் எழுதுகிறார்."சூதாட்டப் பாட்டுகள்,வேள்வியில் உயிர்களைக் கொல்லும் பூசாரிப் பாட்டுகள்,தமிழர் மேற் போரிடுமுன் இந்திரனை வேண்டி பாடியப் பாட்டுகள் போல்வனவே மிகுதியும் நிரம்பிய இருக்கு முதலான ஆரிய நூல்கள்தாம் சிவபெருமான் அருளிச் செய்தனவாம்!"

வேதகாலத்தில்தான் அப்படி என்றெல்லாம் யாராவது கூறினால் பாரத காலத்திலும் அப்படித்தான் என்பதை உணர வேண்டும். தசராவும் தீபாவளியும் சூதாட்டத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள் என்பதை வடபுலம் இன்றளவும் என்பித்துக் கொண்டிருக்கிறது. தெற்கே வந்து வணிகம் செய்தோ, வட்டி வாங்கியோ கொலுத்துக் கொண்டிறுக்கும் வடநாட்டார்களும் இந்த விழாக் காலங்களில் சூதாடுவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றனர்.

அசுரர் ஒழுக்கம் எப்படி?

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி" எனும் திருக்குறளும்
பொருள் கொடுத்துப் பொய்மேற் கொளீ இ அருள்கெடுத்து

அல்லல உழப்பிக்குஞ் சூது" எனும் திருக்குறளும் அசுரர் ஒழுக்கத்திற்குச் சான்றுகள்.

குடித்தவன் தன் தாய் முன்பு வருவதே கொடுமை எனும்ப்போது கற்றோர் முன் எப்படி வரமுடியும்? தன் மகன் செய்யும் எதையும் பொறுத்துக் கொள்ளும் தாய் கூட கள் குடிப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்கிறது அசுரர் அறநூல். அதே போன்று, சூதாடுபவனின் சொத்தெல்லாம் போய், பொய் பேசிடச் செய்வதோடு, எல்லையற்ற துன்பத்தைத் தரும் என்றும் வென்றால் கூட சூதாடாதே அது தங்கத் தூண்டிலை மீன் கவ்வியது போல ஆடுபவனை அழித்துவிடும் என்பது அசுரர்களின் அறநூலாகிய குறள்நூல் கூறும் கருத்தாகும்.

சுரர்களின் ஒழுக்ககேடு

கள்ளுண்டு,காமம் மிகுந்து சுரர்கள் என்னென்ன செய்தனர் எனப் பட்டியலிடுகிறார். மறைமலையடிகள் தம் ''மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும்'' என்ற நூலில்!

" ஆரிய மாந்தரும் அவரால் தெய்வமாகக் கொள்ளப்பட்டோரும் செய்த காமப்புன்செயல்கள் அவரெழுதி வைத்த நூல்களிலேயே காணப்படுகின்றன.பிரஜாபதி காமங் காழ்ப்பேறித் தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த்தான் செய்த அத் தீவினைய நினத்து மிக வருந்தினமை சதபதபிரமாணம் (1,7,4) அய்தரேய பிரமாணம் (3 13 ) மத்ஸ்யபுராணம் (3-32,49) முதலிய நூல்களில் வெளிப்படையாகச் சொல்லப் பட்டிக்கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறி கொண்டு கவுதம முனிவரின் மனைவியான அகலிகையைப் புணர்ந்தமை இராமாயண உத்தர காண்டத்தில் (௩0 ௧௯, ௩௧ ) குறிக்கப்பட்டிருக்கின்றது. விவஸ்வான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந்தும், யமி தன் தமையனைப் புணர முயன்றமை இருக்கு வேதத்திலேயே (1010) நன்கெடுத்துச் சொல்லப்பட்டது. "

"வருணப் பிரகாசம் என்னும் வேள்வியை வேட்கும் குரவன் தன் மனைவி பலரைக் கூடியிருக்க வேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் நீ எவ்வெவரோடு கூடியிருந்தனை?' எனக் கேட்டு அவள் வாய்மொழி வினவுதலைச் சதபத பிரமாணம் (2, 5,2,20 ) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காம வொழுக்கம் இனைத்தென்பது துணியப்படு கின்றதன்றோ?" என்று மேலும் சுரர்களின் ஒழுக்கச் "சிறப்பை" மறைமலை அடிகள் விளக்குகின்றார்.

இப்பேர்பட்ட குடிகேடர்கள், சூதாடிகள், காம வெறியர்கள்தாம் சுரர்கள். இவையேதும் இல்லாத மக்களை இக் கேடர்கள் அசுரர்கள் எனக் குறிப்பிடத் தொடங்கி தஸ்யுக்கள், தாசர்கள், இராட்சதர்கள் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அசுரர்களை, இராக்கதர்களைக் கொன்றமை எனப் புனைகதை எழுதி வைத்து விழாக் கொண்டாடுகின்றனர். அதன் வழியே, நவராத்திரி, தீபாவளி விழாக்கள் சுரர்களால் அசுரர்கள் அழிக்கப்பட்டனர் எனும் வெற்றி விழாக்கள் என "அவாளால்" வழங்கப்படுகின்றன. இம் மயக்கம் தெளிந்து மதிபெறும் நாள் நம்மவர்க்கு வரும் நாள் எந்நாளோ?

(அடிப்படை : மாணிக்கவாசகர் - வரலாறும் காலமும் இரண்டாம் பகுதி )

1 கருத்து:

  1. வணக்கம் ஐயா. மிக அருமையான பதிவு. இப்பொழுதுதான் வாசிக்க நேர்ந்தது. தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி இது. நன்றி. தொடரட்டும் தங்களின் பணி.

    பதிலளிநீக்கு